Wednesday, December 17, 2014

மணிவாசக மலர்

                                           ஆக்கியோர்: தவத்திரு ஆத்மானந்த ஸ்வாமிகள்

   மணிவாசக இன்பம்  !

"பல்கா லுன்னைப் பாவித்துப்
     பரவி  பொன்னம்பல மென்றே
 ஒல்கா நிற்கு முயிர்க்கிரங்கி
     யருளா என்னை யுடையானே"


 மணிவாசக மலர்                                                   மணம்: 1

   ஏத்தினால் அருள்வான் 

தமிழிலக்கியத்திலும் அற்புதமான வேதாந்தக் கருத்துக்கள் , அபூர்வமான காட்சிகள் நிறைந்திருக்கின்றன !

                                     "தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
                                      மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை
                                      திருவா சகமும் திருமூ லர்சொல்லும்
                                      ஒருவா சகமென் றுணர் !"

வள்ளுவர் திருக்குறள், உபநிஷத்தின் முடிவு, யோகவாசிஷ்டம், திருவாசகம், திருமூலர் திருமந்திரம், யாவும் 'ஒரு வாசகம் என்று உணர்' என்கிறது மேலே சொன்ன பாட்டு . இந்த ஐந்தும் நமது மனத்திற்கு அடிக்கடி கூறும்  ஒரு வாசகம் என்ன தெரியுமா?   - 'பகவானை தியானிப்பதை மறக்காதே'   

மணிவாசகர் மொழி பார்க்கலாம்:

"வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு(உ)னக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய்நீ அவலக் கடலாய வெள்ளத்தே"

மனத்திற்கு வாழ்க்கையை வாழவேண்டும் என்றுதான் எண்ணம் இருக்க வேண்டும். அனால் நமது நெஞ்சம் "வாழாத நெஞ்சம்". அது பேரின்ப வாழ்க்கையை வாழக் கருதாத மனம். அதுவும் பேரின்ப வாழ்க்கையைக் கருதாமல் வாழ்கின்றது, எப்படி ? வீணாக நிலைத்து வாழ்கின்றது. வலிய  வினையில் அகப்பட்டு துயரத்தில் ஆழ்ந்து வாழ்கின்றது. பிரபு, பிரபஞ்சம் இரண்டில் ஒன்றைத்தான் மனது  நாடி வாழ வேண்டும். பிரபுவை நினைத்துக்கொண்டே வாழ்வது நமக்கு சரியானது. நாம் பிரபஞ்சத்தை நினைத்துக்கொண்டே வாழ்கின்றோம். நமது அறிவு நம்மை இறைவன் பால் ஈர்க்கிறது. நமது மனமானது உலகை அவாவி நிற்கிறது. மாணிக்கவாசகர் நமக்கு அறிவுறுத்துகிறார். 'நான் சொன்னபடி கேள். பிரபஞ்சபரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனதைத் தடுத்து நிறுத்திப்  பேரின்பபரமாக மாற்று . நம்மை சம்சாரக் கடலில் ஆழாமல் காப்பவன் யார்?  பிரபு!  "ஆழாமற் காப்பானை எத்தாதே, சூழ்கின்றாய் கேடு' ..'பல்காலும் நீ அவலக் கடலாய வெள்ளத்தே வீழ்கின்றாய்' "

எனவே, ஈஸ்வர த்யானம் கேடுகள் வராமல் காப்பாற்றும் மருந்து !

                   "பல்கா லுன்னைப் பாவித்துப்
                    பரவி  பொன்னம்பல மென்றே
                    ஒல்கா நிற்கு முயிர்க்கிரங்கி
                    யருளா என்னை யுடையானே"

--January 07 1992